Posted tagged ‘சட்டவிரோதம்’

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [1]

ஓகஸ்ட் 29, 2020

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [1]

 

வக்ஃப் போர்ட், உறுப்பினர் நியமனம் முதலியன: முஸ்லிம் மக்கள், அவர்களின் சொத்துகளை வக்ஃப் பத்திரம் மூலம் பொதுக் காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு இந்தியாவில் மட்டும் தானமளிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இப்படி தானமளிக்கப்படும் வக்ஃப் சொத்துக்களைப் பராமரிக்க, பொது மற்றும் தனியார் வக்ஃப் அமைப்புகள் உள்ளன. இவற்றைக் கண்காணித்து, நடுநிலைமையோடு வழிநடத்தி, நிதியை நிர்வகித்து, வக்ஃப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பது போன்ற பணிகளைச் செய்ய வக்ஃப் வாரியம் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் இருக்கிறது. இந்த வக்ஃப் வாரியத்தில் – 11 / 12 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி 2017ல் தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினராயினர். பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

  1.  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக (elected) இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
  2. இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்,
  3. இரண்டு முத்தவல்லிகள் (மசூதி மேற்பார்வைத் தலைவர்)
  4. இரண்டு முஸ்லிம் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும்
  5. அரசால் நியமிக்கப்பட்ட (nominated) உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

எந்தவொரு சமயத்திலும், நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று வக்ஃப் வாரிய சட்டம் சொல்கிறது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வக்ஃப் வாரிய தலைவராக இருந்த அன்வர் ராஜா போட்டியிடாததால், அவர் உறுப்பினரல்லாது போனார். உறுப்பினர் இடங்கள் பல காலியாக இருந்ததால், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாகப் புதியவர்களைத் தேர்வுசெய்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமலே சிறப்பு அதிகாரியை ஆளுநர் நியமித்திருக்கிறார்.

வக்ஃப் போர்ட் கலைக்கப் படவில்லை, அரசு கட்டுப்பாட்டில் போய் விடுமோ என்ற அச்சத்தில் பிரச்சினை: வக்ஃப் போர்ட் கலைக்கப் படவில்லை, இப்பொழுதைய ஆளும் அரசு, உறுப்பினரை நொயமித்துள்ளது. அதனை மற்றவர் எதிர்க்கின்றனர். மேலும், வக்ஃப் வாரிய வழக்கு பற்றி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன் பேசுகையில்[1], “இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், வக்ஃப் வாரியத்தைத் தொடர்ந்து செயல்படவைக்க வேண்டும். வக்ஃப் வாரியத்தை கலைக்கக்கூடாது அனைத்து வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் சார்பிலும் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு,18.09.2019 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தற்போதையை நிலையே (status quo) தொடர வேண்டும், வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். வழக்கு நிலுவையில் இருந்து, நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு இருந்தும் வாரியத்தைக் கலைத்திருப்பதால், ஆளுநர் ஆணையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக் கூடும்,” என்றார்[2].

அதிமுக-திமுக அதிகார போட்டியாக மாறிவிட்ட பிரச்சினை: இதுகுறித்துப் பேசிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், “தமிழக அரசு, சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஜனநாயக முறையில் மக்களதிகாரத்தில் இருக்கும் ஒரு வாரியத்தை முறையின்றிக் கலைத்து, பல கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்கும் அனைத்து அதிகாரத்தையும் ஒரு அதிகாரியிடம் ஒப்படைப்பது, அரசுக்கு முஸ்லிம் மக்கள்மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது. பல கோடி ரூபாய் முஸ்லிம் மக்களின் நன்கொடையை நிர்வகிக்கும் அமைப்பைக் கலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாரியம் உறுப்பினர்களோடு செயல்படும்போது மட்டுமே, ஊழலற்ற நியாயமான தீர்வுகளை எட்ட முடியும். தமிழக அரசின் இந்த முடிவு, அவர்களின் விருப்பத்துக்கு உகந்தவர்களை வாரியத் தலைவர்களாக நியமிக்க முடியாத காரணத்தினால் நடக்கிறது. எதிர்க்கட்சியினராக இருந்தாலும், ராஜ்யசபாவுக்கு அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது ஜான் எம்.பி, வாரியத் தலைவராக இருந்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடரட்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆனால், அரசு எதற்குமே செவிசாய்க்காமல், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஒரு தனி நபரை வாரியத்தின் அதிகாரியாக நியமித்திருப்பது நிச்சயம் ஜனநாயகத்திற்கு, சிறுபான்மையினருக்கு எதிரானதே,” என்றார்.

கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை.: கடந்த 2019 செப். 18 அன்று வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக்கூறி வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டது[3]. மேலும் தமிழக நிதித்துறை செலவின செயலரான சித்திக்கை வக்பு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது[4]. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வக்பு வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரும் இடையீட்டு மனுதாரர்களாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். அரசுத் தரப்பில் ஆஜராகிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், நீதிமன்றத்தில் நான் சொன்னதுதான் எங்கள் தரப்பு கருத்து எனக்கூறி, அதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இடைக்காலத்துக்கு மட்டும் சிறப்பு அதிகாரி  நியமிக்கப்பட்டுள்ளார், வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார். மேலும், 23.09.2019 நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறப்பு அதிகாரியாக சித்திக் தற்போதைக்கு பதவி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் பட்ட பிரச்சினை: அதில், ”பார் கவுன்சில் உறுப்பினர்களில் இஸ்லாமியர்கள் எனும் பட்சத்தில் வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட இஸ்லாமியர்களாக உள்ள 2 மூத்த வழக்கறிஞர்களையும் வக்பு வாரிய சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவே கருத வேண்டும். அவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் வக்பு வாரியத்தை கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்து வக்பு வாரியத்திடமே அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டுமென கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான பசுலூர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் எச்.ஆறுமுகம், மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகமூத் பராச்சர், இ.அப்ரார் முகமது அப்துல்லா, எச்.முகமது கவுஸ் ஆகியோரும், வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

தேர்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள், பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம்: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வக்பு வாரியத்தில் முறைப்படி தேர்தல் மூலமாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அவர்களின் சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுகிறது. எனவே அவர்கள் பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பளித்துள்ளனர். வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் 3 பேரும், அதிமுகவைச் சோ்ந்த ஒருவரும் தோ்வு செய்யப்பட உள்ளனா்[5]. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. மேலும், எம்.எல்.ஏ.,க்களில் திமுகவைச் சோ்ந்த முகமது அபுபக்கா், கே.எஸ்.மஸ்தான் ஆகியோரும் மனு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறக் கூடிய தலா இரண்டு இடங்களுக்கு இரண்டு போ் மட்டுமே போட்டியிடுவதால் அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது[6]. வக்ஃபு வாரியத்தில் எம்.பி.,க்கள் இரண்டு பேரும், எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரும் உறுப்பினா்களாக தோ்வு செய்யப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதபிரகாஷ்

29-08-2020


[1] விகடன், `ஒரு லட்சம் கோடி சொத்துக்களை நிர்வகிக்க ஒற்றை அதிகாரி!’- வக்ஃப் வாரிய விவகாரத்தில் என்ன நடக்கிறது, ஜெனிஃபர்.ம.ஆ; செ.சல்மான் பாரிஸ், Published:26 Sep 2019 7 PMUpdated:26 Sep 2019 7 PM

[2] https://www.vikatan.com/news/judiciary/only-one-person-to-manage-one-lakh-crore-worth-assets-whats-happening-in-waqf-board

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசு உத்தரவு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு, By Sivam | Published: Monday, August 17, 2020, 21:25 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/dissolving-the-tamil-nadu-tamil-nadu-wakf-board-as-it-is-illegal-high-court-394804.html

[5] தினமணி, வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தல்: திமுக 3, அதிமுகவில் ஒருவருக்கு வாய்ப்பு, By DIN | Published on : 01st August 2020 06:18 AM

[6] https://www.dinamani.com/tamilnadu/2020/aug/01/waqf-board-member-dotal-opportunity-for-one-in-dmk-3-aiadmk-3444028.html