அரசியலையும் மதத்தையும் கலக்கக் கூடாது : லிபரான் அறிக்கை முழுவிவரம்
புதுடில்லி : “”அரசியலையும் மதத்தையும் கலக்கக் கூடாது. அப்படிக் கலந்தால் என்ன நடக்கும் என்பதைத்தான், அயோத்தி சம்பவம் காட்டுகிறது. அரசியல் மற்றும் மதத்தைக் கலந்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க வழிவகை செய்யும் சட்டம் கொண்டுவரப்படவேண்டும்” என்று, லிபரான் அறிக்கை கூறியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு சம்பந்தமான, லிபரான் அறிக்கை நேற்று பார்லிமென்ட்டின் இருஅவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் அந்த அறிக்கை மீது, அரசு நடவடிக்கை தகவல் 13 பக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.லோக் சபாவில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிக்கையைத் தாக்கல் செய்தார். பத்திரிகைகளில் அறிக்கை கசிந்தது குறித்து விளக்கம் கேட்ட பா.ஜ., உறுப்பினர்களுக்கு, எந்த பதிலும் அளிக்காமல், சிதம்பரம் அமைதியாக அவையை விட்டு வெளியேறினார்.பின், ராஜ்யசபாவில் பா.ஜ., உறுப்பினர்களின் அமளிக்கிடையில், லிபரான் அறிக்கையைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, இரு அவைகளிலும் அறிக்கை மீதான விவாதம் நடந்தது.
என்ன இருக்கிறது…?கடந்த 1992 டிசம்பர் 6 ம் தேதி அன்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு, ஓய்வு பெற்ற ஆந்திர மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது.கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை நடத்திய கமிஷன், அதற்காக 48 முறை நீட்டிக்கப்பட்டது.வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 தலைவர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளன. மேலும் உ.பி., கல்யாண்சிங் அரசு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங்கபரிவார் அமைப்புகளால் இயக்கப் பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளது. அறிவு மற்றும் கொள்கை ரீதியில் நடந்த சம்பவங்களுக்கு வாஜ்பாய், அத்வானி, ஜோஷி பொறுப்பாவர் என்றும், தவறான தகவல்களை கோர்ட், நாடு மற்றும் மக்களுக்கு இவர்கள் அளித்துள்ளனர் என்றும், அந்த அறிக்கை கூறியுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள்: அரசியலும் மதமும் ஒன்றுக்கொன்று கலக்கக் கூடாது. மதத்தின் அடிப்படையிலோ அல்லது மதப் பிரச்னைகளைத் தனது அரசியல் பொருளாகவோ கொண்ட அரசு அமைவது தடுக்கப்பட வேண்டும். அரசியலும் மதமும் இணைவதால் விளைந்த பலனைத்தான், அயோத்தியில் அறுவடை செய்திருக்கிறோம். அரசியலும் மதமும் இணைவதைத் தடுக்கும் வகையில், சட்டம் இயற்றப்பட வேண்டும்.அரசியல் தலைவர்கள், சட்ட அமைப்புகளில் இருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் போன்றவர்கள், மத அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதைத் தடுக்க வேண்டும்.மத சம்பந்தமான நம்பிக்கைகளின் அடிப்படையில், பிரச்னைகளை உருவாக்குவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்.சர்ச்சைக்குரிய இடத்தில், கோவிலா மசூதியா எது இருந்தது என்பதை தொல்லியல் நிபுணர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், மானிடவியல் நிபுணர்களும் மேற்கொள்ளும் அறிவியல் ரீதியிலான ஆய்வுகள்தான் வெளிப்படுத்தும்.
இதில் அரசியல்வாதியோ, பத்திரிகையாளரோ, நீதிபதியோ அவர்கள் என்னதான் தலைசிறந்தவர்களாக இருந்தாலும் கூட பதில் அளிக்க முடியாது. அப்படி அவர்கள் அதற்குப் பதிலளிக்க முற்பட்டால், அது மோசமான விளைவுகளைத்தான் தரும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றைப் பரிசீலிப்பதாக, நடவடிக்கை குறித்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆயிரம் பக்கங்கள் : * மொத்தம் ஆயிரம் பக்கங்களில், நான்கு பிரிவுகளாக இந்த அறிக்கை அமைந்துள் ளது.
* அயோத்தி மற்றும் ராமர் பற்றிய புராண, வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கியது.
* முதல் இரண்டு பகுதிகளும் இந்தியாவில் மதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரித்துள்ளன.
* மூன்றாவது பகுதி, மசூதி இடிப்பில் தனிநபர்களின் தொடர்பினை விளக்குகிறது.
* பா.ஜ., தலைவர்கள் வினய் கத்யார், உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, எல்.கே. அத்வானி,கோவிந்தாச்சார்யா, வி.எச்.பி., தலைவர் அசோக் சிங்கல், கிரிராஜ் கி�ஷார் போன்ற முக்கியத் தலைவர்களின் பெயர்கள், அயோத்தி சம்பவத்தில் தொடர்புடையவர்களாக அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மறுமொழியொன்றை இடுங்கள்