
கோவை : கோவையில், ‘அல் – உம்மா’ பாஷாவின் மகன் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஆன் லைன் டிரேடிங்’ நிறுவனம் நடத்தி 100 கோடி ரூபாய் மோசடி செய்த பெண்ணை கடத்தி, கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றது விசாரணையில் அம்பலமானது.
கோவை:மோசடி நிதி நிறுவன பெண் உரிமையாளரை கடத்திய வழக்கில் கைதான சித்திக் அலியை, போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.கோவை பீளமேடு, நேரு நகரில் கே.எஸ்.மெர்கன்டைல் நிதி நிறுவனம் நடத்தி 67 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சசிரேகா (45). முன்னதாக சென்னையில் தலைமறைவாக இருந்த இவரை, கோவை வரவழைத்த சிலர், போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள நிசார் என்பவர் வீட்டில் அடைத்து வைத்தனர்.
இது தொடர்பாக, போலீசார் விசாரித்து அல்-உம்மா பாஷாவின் மகன் சித்திக் அலி, அவரது உறவினர் நிசார், பாபு ஆகியோரை கைது செய்தனர். வழக்கில் கூடுதல் தகவல் பெற, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்திக் அலியை விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். மூன்று நாள் விசாரணைக்கு அனுமதி கோரி ஜே.எம்.எண்:7 கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.நேற்று, இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் தெய்வம், சிறையிலுள்ள சித்திக் அலியை ஒரு நாள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்து உத்தரவிட்டார். சித்திக் அலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஏப். 26க்கு ஒத்தி வைத்தார்.
‘ஆன் லைன் டிரேடிங்’ பெயரில் நடப்பது என்ன? கோவைப்புதூரைச் சேர்ந்தவர் கல்கி (52); இவரது மனைவி சசிரேகா (47). இவர், கோவை, காளப்பட்டி ரோடு, நேரு நகரில் ‘கே.எஸ்., மெர்கன்டைல்’ என்ற ‘ஆன் லைன் டிரேடிங்’ நிறுவனத்தை பல மாதங்களுக்கு முன் துவக்கினார். தமது நிறுவனம் வெளிநாட்டு கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவதாக விளம்பரம் செய்த இவர், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘கே.எஸ்.,மெர்கன்டைல்’ நிறுவனம் மீது திருச்சியைச் சேர்ந்த பாலதண்டாயுதபாணி என்பவர், கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்தார். அதில், ‘நான், 21 லட்சம் ரூபாயை சசிரேகா நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். முதலீடு செய்யப்பட்ட பின், அடுத்த மாதத்தில் 40 சதவீத தொகை, அதற்கு அடுத்த மாதத்தில் 40 சதவீத தொகை, பின்னர் 20 சதவீத தொகையை திருப்பி வழங்குவதாக கூறியிருந்தார். தவிர, கடைசி மாதத்தில் முதலீடு தொகை முழுவதையும் வழங்குவதாக கூறிய அவர், 200 மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் கூறினார். ஆனால், அது போன்று எவ்வித தொகையையும் அளிக்காமல் ஏமாற்றிவிட்டார்’ என, தெரிவித்திருந்தார்.
இந்து-முஸ்லீம் கூட்டணியா-கொள்ளையா? இதையடுத்து, ‘கே.எஸ்.,மெர்கன்டைல்’ நிறுவன அதிபர் சசிரேகா மீது மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சசிரேகாவும், அவரது கணவர் கல்கியும் தலைமறைவாகினர். போலீசார், இவர்களை தேடிவந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சித் தகவல் போலீசாருக்கு எட்டியது. மோசடி நிறுவன அதிபர் சசிரேகாவை, கோவையைச் சேர்ந்த சித்திக்அலி மற்றும் அவரது நண்பர்கள் கடத்திச் சென்று, போத்தனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சிறைபிடித்து மிரட்டிவருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு திடீர் சோதனை நடத்திய போலீசார், சசிரேகாவை மீட்டனர். இது தொடர்பாக, கோவை தெற்கு உக்கடம், பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்த சித்திக்அலி(32), அவரது நண்பர், ஈரோடு மாவட்டம், வண்டிபாளையத்தைச் சேர்ந்த நிசார் (28) ஆகியோரை கைது செய்தனர். சசிரேகா அளித்த புகாரை தொடர்ந்து, இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 342 (குற்றத்தில் ஈடுபடும் நோக்கில் தடுத்து நிறுத்துதல்), 384 ( ஆள் கடத்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.
கோவை குண்டு வெடிப்பில் விடுதலையான மாஜி குற்றாவாளியின் பங்கு: பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதான சித்திக்அலி, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பின் விடுதலையானவர். இவர், தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கோவை சிறையிலுள்ள ‘அல் – உம்மா’ நிறுவனர் பாஷாவின் மகன். இவரது நண்பர் நிசார், தமது உறவினர்களிடம் பணம் பெற்று மோசடி நிறுவனத்தை நடத்திய சசிரேகாவிடம் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிசார், பாஷா மகன் சித்திக்அலியை சந்தித்து உதவி கோரியுள்ளார். இருவரும், வீட்டிலிருந்த சசிரேகாவை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியபோது தான், போலீசாரிடம் பிடிபட்டு கைதாகியுள்ளனர்.
போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது: ‘கே.எஸ்.,மெர்கன்டைல்’ என்ற மோசடி நிறுவனம் சம்மந்தப்பட்ட வழக்குகளை இரு விதமாக கையாள்கிறோம். ஒன்று, அந்நிறுவனம் மக்களிடம் முதலீடு பெற்று நிதி மோசடி செய்தது; மற்றொன்று, அந்நிறுவனத்தை நடத்திய சசிரேகாவை கடத்தி மூவர் பணம் கேட்டு மிரட்டியது. முதல் வழக்கை மாநகர மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கிறது. அடுத்த வழக்கை, போத்தனூர் போலீஸ் விசாரிக்கிறது. மோசடி பெண், முதலீட்டாளர்களுக்கு பதிலளிக்க முடியாமல் தலைமறைவாகியிருந்த வேளையில் மூவரால் கடத்தப்பட்டு பணம் கேட்டு மிரட்டப்பட்டார். அவ்வழக்கில், சித்திக்அலி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவாக உள்ள பாபு என்பவரை தேடி வருகிறோம். நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய சசிரேகாவிடம் விசாரணை நடக்கிறது. இது போன்ற மோசடி நிறுவனங்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு, சைலேந்திரபாபு தெரிவித்தார்.
ரூ.1,000 கோடி சுருட்டல்: கோவையில் சமீபகாலமாக அடுத்தடுத்து ‘ஆன் லைன்’ வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது குறித்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: கோவை நகரில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ‘விக்டரி பாரக்ஸ்’ ‘புரோ இந்தியா’ ‘யூரோ பே’ ‘கேவல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ ‘கிரீன் லைப்’ என்ற பெயரிலான ‘ஆன் லைன்’ வர்த்தக நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளன; தற்போது, ‘கே.எஸ்.,மெர்கன்டைல்’ நிறுவனமும் சேர்ந்து கொண்டது. இந்நிறுவனங்களில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி மோசடி நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இந்நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படாதவை. முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றதற்கான ரசீது எதுவும் தராமல், பின் தேதியிட்ட ‘செக்’குகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளனர். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, மோசடி நபர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர்.
மர்மமான வியாபாரமா அல்லது வேறு யாதாவதா? ‘கிரீன் லைப்’ என்ற நிறுவனத்தை நடத்திய நபர்களின் பின்னணி, வியப்பாக உள்ளது. மெக்கானிக் தொழில் செய்து வந்த அம்ஜத்கோரியும், அவரது சகோதரர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அஸ்மத் கோரியும் ‘ஆன் லைன்’ நிறுவனத்தை துவக்கி, ஒன்றரை ஆண்டுகளில் 157 கோடி ரூபாயை முதலீடு பெற்று, மோசடி செய்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் இது எவ்வாறு சாத்தியம்? என்பது மர்மமாகவே உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
சாதாரண மக்களுக்குப் புரியாத அளவில் பல விஷயங்கள் இதிலுள்ளது தெரிகிறது. ஏதோ மும்பை தாதாக்கள் மாதிரி, சட்டத்தை தாமே கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டனர் அல்லது சிலர் கோயம்புத்தூரில் நடந்துக் கொள்கின்றனர் என்பது விசித்திரமாக இருக்கிறது.
பணத்தை கொடுத்து அல்லது முதலீடு செய்து ஏமாந்தவர்கள் எல்லாமே, இப்படி கிளம்பிவிட்டால், ஒன்று பணத்தை வாங்கி ஏமாற்றுபவர்கள் பயப்படுவார்கள் அல்லது போலீஸாருக்கு வேலையே இருக்காது!

கோவையில் ‘ஆன்லைன் டிரேடிங்’ நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சுருட்டியதில், தனியார் வங்கிகளும் சம்மந்தப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடி நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கி அதிகாரி, தலைமறைவானார். தனியார் வங்கிகளின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார், முதலீட்டாளர்களை உஷார்படுத்தியுள்ளனர். சர்வதேச மதிப்பு குறையும் போது வெளிநாட்டு கரன்சிகளை வாங்கி, மதிப்பு உயரும் போது விற்று, முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித்தருவதாக கூறும் ‘ஆன்லைன் டிரேடிங்’ நிறுவனங்கள், தமிழகத்தில் புற்றீசல் போல தோன்றியுள்ளன. இதுவும் ஒரு வகையான சூதாட்டம் என்பதை அறியாமலும், வர்த்தக எதிர்விளைவுகளை உணராமலும், பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து, பணத்தை இழந்து வருகின்றனர். இவ்வாறு, கடந்த ஓராண்டில் கோவை நகரில் துவக்கப்பட்ட ‘யூரோ பே’ ‘கேவல்’ ‘கிரீன் லைப்’ ‘கே.எஸ்.,மென்கன்டைல்’ உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுமக்களின் முதலீடுகளை சுருட்டிய பின் மூடுவிழா கண்டுவிட்டன. இதுதொடர்பாக, நிறுவனங்களின் அதிபர்கள் 10 பேரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, மேலும் நான்கு பேரை தேடுகின்றனர்.மூடுவிழா கண்ட நிறுவனங்களை தவிர, மேலும் எண்ணற்ற நிறுவனங்கள் நகரில் செயல்படுவதாக போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் மீதான புகார் வராததால், செய்வதறியாது திகைக்கின்றனர். இது போன்ற மோசடிகளில் நடுத்தர வர்க்கத்தினர் அதிக பணத்தை இழந்துள்ளனர்.
நிறுவன பதிவில் மோசடி: மோசடியில் ஈடுபடும் ‘ஆன்லைன் டிரேடிங்’ நிறுவனத்தின் அதிபர்கள், தமது நிறுவனத்தை எஸ்.எஸ்.ஐ.,(ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரீஸ்) என்ற பெயரிலோ அல்லது ‘சொசைட்டி’ என்ற பெயரிலோ பதிவுச்சான்று பெற்று இணையதளங்களில் வெளியிட்டு முதலீட்டாளரை நம்பவைக்கின்றனர். பின்னர், பணத்தை முதலீடு செய்வோரிடம், நான்கு அல்லது ஐந்து பக்கம் கொண்ட ஒப்பந்த பத்திரங்களில் கையெழுத்து பெறுகின்றனர். அதில், நிறுவனத்துக்கு, கடனாக பணம் வழங்குவதாகவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய லாபத்துடன் திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கும்.முதலீடு செய்வோர், அனைத்து வாசகங்களையும் நன்கு படித்து பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கிடையாது; நேரடியாக கையெழுத்திட்டு விடுகின்றனர். ஆரம்ப நாட்களில் சிலருக்கு அந்நிறுவனத்தின் அதிபர், தனது பெயரிலான வங்கிக்கணக்குக்கு உரிய ‘செக்’குகளை பின் தேதியிட்டு வழங்குவார். அது தனி நபர் வங்கி கணக்கு சம்மந்தப்பட்டது. இதன் மூலமாக, நிறுவனம் எந்த வகையிலும் ஆவண ரீதியான ஆதாரங்களை கொண்டிருக்காது. மோசடிக்குள்ளாகி பணத்தை இழக்கும் முதலீட்டாளர்கள், ‘செக்’ மோசடி வழக்கை மட்டுமே கோர்ட்டில் தொடர முடியும். வழக்கு தொடுப்பதற்கும், குறிப்பிட்ட தொகையை, மனுதாரர் ‘டிபாசிட்’டாக கோர்ட்டில் செலுத்த வேண்டும். இவ்வளவு ‘சிக்கல்கள்’ இருப்பதை, முதலீட்டாளர்களில் பலரும் கவனத்தில் கொள்வதில்லை.
பாதுகாப்பற்ற முதலீடு: ‘ஆன்லைன் டிரேடிங்’ நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன், அந்நிறுவனம் சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா? ‘ரிசர்வ் வங்கி’யின் உத்தரவாதச்சான்று பெறப்பட்டதா? நிதி வர்த்தக கண்காணிப்புகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டதா? வங்கி கணக்கு நிறுவனத்தின் பெயரில் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல அம்சங்களையும் முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்திருந்தாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அனைத்து வாசகங்களையும் வரி விடாமல் படித்து, சாதக, பாதக விளைவுகளை அறிந்து கொள்ளவேண்டும்.ஏனெனில், பதிவு செய்யப்படாத, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறப்படாத நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வது என்பது, கண்களை மூடிக்கொண்டு, ஆழக்கிணற்றை நோக்கி பயணிப்பதற்கு சமமானது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் நிதி விவகாரங்களை மட்டுமே ரிசர்வ் வங்கி மற்றும் நிதி வர்த்தகம் தொடர்பான கண்காணிப்பு ஏஜென்சிகள் கண்காணிக்கின்றன. மற்ற நிறுவனங்கள், அவற்றின் பார்வைக்கும், ஆய்வுக்கும் வராதவை. எனவே, நிதி முதலீடுகளில் முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்.
தனியார் வங்கிகள் உடந்தை: தனி நபரால் துவக்கப்பட்ட நிறுவனம், குறுகிய கால இடைவெளியில் கோடிக்கணக்கான ரூபாயை வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்யும் போது, வங்கிகள் கண்காணித்து, சம்மந்தப்பட்ட புலனாய்வு ஏஜென்சிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. இதை, தனியார் வங்கிகள் கண்காணிப்பதில்லை. இதனால் நிறுவனத்தின் அதிபர்கள், முதலீட்டாளர்களின் பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிய பின்னர், கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட ‘பினாமி’களின் பெயருக்கும் மாற்றி விடுகினறனர்.மோசடி அம்பலமாகி, முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தாலும், சம்மபந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரிலோ அல்லது அதை நடத்திய நபர்களின் பெயரிலோ, வங்கி கணக்கில் பெரிய அளவிலான தொகை ஒன்றும் இருப்பதில்லை. இதனால், முதலீட்டாளரின் தொகை அப்படியே விழுங்கப் படுகிறது. பணத்தை முதலீடு செய்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, இது போன்ற மோசடிகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்கின்றனர், போலீசார்.
கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: எவ்விதமான உழைப்புமின்றி குறுகிய காலத்தில் எளிதாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும், என்ற எண்ணம் கொண்டோரால் தான், ‘ஆன்லைன் டிரேடிங்’ மோசடி அதிகரித்துள்ளது. எந்த ஒரு முதலீட்டு தொகைக்கும் சட்ட ரீதியான, நியாயமான லாபத்தையே எதிர்பார்க்க வேண்டும். அதைவிடுத்து, 40 சதவீதம், 50 சதவீதம் லாபம் பெற முயற்சித்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும்.’ஆன்லைன் டிரேடிங்’ என்பதும் ஒரு வகை சூதாட்டமே. முதலீடு செய்வோர் பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். பணத்தை இழந்த பின் போலீசில் புகார் அளிக்க ஓடிவருவது, காலம் கடந்த செயல்; சட்ட ரீதியாக மோசடி நிதியை மீட்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு வேளை முதலீட்டு தொகை கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு.இவ்வாறு, செல்வராஜ் தெரிவித்தார்.
வங்கி அதிகாரி ஓட்டம்!கோவை நகரில் 100 கோடி மோசடியில் ஈடுபட்ட ‘கே.எஸ்., மெர்கன்டைல்’ என்ற ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தின் பெண் அதிபர் சசிரேகா என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது கணவர் கல்கி, நாகபட்டினத்திலுள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரையும் மோசடி வழக்கில் சேர்த்துள்ள போலீசார், கைது செய்ய தீவிரமாக தேடிவருகின்றனர்.
தனியார் வங்கிகளின் அதிகாரிகள் தொடர்பு? மோசடியில் ஈடுபட்ட ‘ஆன் லைன் டிரேடிங்’ நிறுவனங்களின் அதிபர்கள் பெயரிலான வங்கி கணக்குகள் மூலமாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது போன்ற பெரிய அளவிலான தொகைகள், குறுகிய கால இடைவெளியில் பரிவர்த்தனைக்கு உள்ளாகும் போது, சம்மந்தப்பட்ட கணக்குக்குரிய நபர்களின் விபரங்களை, நிதி பரிவர்த்தனை கண்காணிப்பு ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்துவது வங்கிகளின் கடமை. ஆனால், சில தனியார் வங்கிகள் அது போன்ற உஷார் தகவலை, கண்காணிப்பு ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளன. இதனால், மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் தொடர்ந்து சுருட்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே, மோசடி நிறுவனங்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சம்மந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்களிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
– நமது நிருபர் – நன்றி தினமலர் –
அண்மைய பின்னூட்டங்கள்