தமிழ் நாட்டில் ஜமைத் உல் முஜாஹித்தீன் [Jamiat ul Mujahideen] – பங்களாதேச தீவிரவாதம் மற்றும் ஐசிஸ் கைக் கோக்கிறதா?
தமிழ்நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ந்து கைதாவது: இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் அது போன்று சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அப்போது திடுக்கிடும் தவல்கள் வெளியானது. இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து நாடு முழுவதும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். 26% தீவிரவாதிகள் தமிழகத்தில் கைது செய்யப் பட்டது கவனிக்கத் தக்கது.
பாகிஸ்தானின் பண பட்டுவாடா, தீவிர ஊக்குவாதம் முதலியன: கூட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் பேசினார்கள். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கூறியதாவது[1]: “பயங்கரவாதத்திற்கு எதிராக பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தானை பல்வேறு தடவை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது. தற்போது அந்த சர்வதேச அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கூடி பயங்கரவாதிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நாடுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பாகிஸ்தான் அரசு எப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் இந்த செயல் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை சர்வதேச நாடுகளிடம் நிரூபிக்க இன்னும் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு வங்கிகள் மூலம் உதவி செய்வதை தேசிய புலனாய்வு அமைப்பு மிக திறமையாக கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேவையான அளவுக்கு நிதி கொடுக்கிறது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன,” இவ்வாறு அஜித்தோவல் கூறினார்[2].
அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர்: நாடு முழுவதும் ரகசியமாக செயல்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் 127 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 33 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபடும் திட்டத்துடன் 33 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இலங்கை குண்டு வெடிப்பின்போது தற்கொலை படையாக மாறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியான ஜக்ரான் ஹசீம் என்பவனின் வீடியோ பேச்சுக்களே தமிழக இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு முகமையின் கூட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் யோகேஷ் சந்தர் மோடி மற்றும் ஐ.ஜி. அசோக் மிட்டல் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதனடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 பேர், கேரளாவை சேர்ந்த 17 பேர் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 127 பேரை கைது செய்துள்ளோம்[3].
ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வளர்த்தது: இதில், தமிழகம் மற்றும் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தாங்கள் ஜாஹ்ரன் ஹஸிம் என்பவரின் வீடியோ உரைகளைக் கேட்டு தான் தீவிரவாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர்[4]. இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்டது இதே ஜாஹ்ரன் ஹஸிம்தான். கைது செய்யப்பட்டுள்ள மற்றவர்களில் பெரும்பாலானோர் மதப் பிரச்சாரகர் ஜாகிர்நாயக்கின் பேச்சை வீடியோவில் கேட்டு, தீவிரவாத எண்ணத்தை வளர்த்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர காலிஸ்தான் பயங்கரவாத இயக்கம் தொடர்பாகவும் எங்களுக்கு துப்பு கிடைத்துள்ளது[5]. சீக்கியர்கள் நடுவே இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பு தொடர்பாக ஐந்து பேரை உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளோம். இவ்வாறு அலோக் மிட்டல் தெரிவித்தார்[6].
தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான “ஜமாத் உல் முகாஜுதீன்”: இதன்படி தமிழகத்தில் வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான “ஜமாத் உல் முகாஜுதீன்” என்கிற அமைப்பும் புதிதாக சதி திட்டங்களை தீட்டி செயல்பட்டு வந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் புர்கான் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி வந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமாத் உல் முகாஜுதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் பெங்களூரில் மூன்று மாதத்துக்கு முன்பு அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மேற்கு வங்க குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ரஹ்மான், கவுசர் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் குண்டு வெடிப்புக்கு பயிற்சி பெற்றதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் அதற்கான பயிற்சியை மேற்கொண்டதாகவும் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாதிகள் இருவரையும் கிருஷ்ணகிரி மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மலைப் பகுதியில் வெடிகுண்டு துகள்கள் சிக்கியது. ஜெலட்டின் குச்சிகளும் பிடிபட்டன. இது தொடர்பாக 2 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனை மற்றும் ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை: இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருவரும் கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வெடிகுண்டு சோதனையுடன் சேர்த்து ராக்கெட் லாஞ்சரையும் செலுத்தி சோதனை நடத்தி இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது[7]. தமிழகத்தை பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களே தொடர்ந்து பிடிபட்டு வந்த நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த “ஜமாத் உல் முகாஜுதீன்” பயங்கரவாத அமைப்பும் புதிதாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது உள்ளூர் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[8]. கிருஷ்ணகிரி மலைப் பகுதியில் இந்த இயக்கத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளும் தனியாக வந்து ராக்கெட் லாஞ்சர் சோதனையை நடத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இதன் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெரிய அளவில் ‘நெட் வொர்க்’ அமைத்து செயல்பட்ட பின்னரே இரண்டு பயங்கரவாதிகளும் கிருஷ்ணகிரிக்கு வந்து சென்றிருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் கருதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ராக்கெட் லாஞ்சரை செலுத்திய இரண்டு பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[9]. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் பிடிபட்டுள்ளனர். இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்[10].
கிருஷ்ணகிரியில் யார் கண்ணிலும் படாமல் வேலை செய்தனர் என்பதே வியப்புதான்: கிருஷ்ணகிரி மலைப் பகுதிகளில் “அதை கண்டு பிடித்தேன், அதை கண்டு பிடித்தேன்,” என்று ஆராய்ச்சியாளர்கள் திரிந்து கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்பொழுது, செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. பிறகு, அவர்களையும் மீறி, ஏமாற்றி, தீவிரவாதிகள் பயிற்சி பெற்றனர், ராக்கெட் லாஞ்சர் விட்டனர் என்றால் திகைப்பாக இருக்கிறது. முன்னர், எல்.டி.டி.இக்கு, அம்பத்தூர் தொழிற்சாலைக்கு, ராக்கெட் லாஞ்சர் பாகங்கள் எல்லாம் சென்றது ஞாபகத்தில் இருக்கலாம். அதே போல, இப்பொழுது, ஹோசூரிலிருந்து அல்லது சுற்றியுள்ள தொழிற்சாலைலளில் அவை உற்பத்தி செய்யப் பட்டு, அவர்களுக்கு சப்ளை செய்யப் பட்டிருக்கலாம். தமிழ் நாடு மறுபடியும், இன்னொரு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பிற்கு இலக்காகாமல் இருந்தால் சரி.
© வேதபிரகாஷ்
15-10-2019
[1] மாலைமலர், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு – தமிழ்நாட்டில் 33 பேர் கைது, பதிவு: அக்டோபர் 14, 2019 14:46 IST
[2] https://www.maalaimalar.com/news/district/2019/10/14144623/1265911/33-arrested-in-TN-contact-with-IS-Militants.vpf
[3] புதியதலைமுறை, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு… தமிழகத்தில் 33 பேர் கைது, Web Team Published : 14 Oct, 2019 11:58 am
[4] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73127-connection-with-is-127-arrested.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்,
By Veerakumar, Updated: Monday, October 14, 2019, 18:35 [IST]
[6] https://tamil.oneindia.com/news/delhi/33-isis-supporters-arrested-from-tamilnadu-says-nia-365609.html
[7] தினத்தந்தி, தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாத அமைப்பு சதி திட்டம்– ராக்கெட் லாஞ்சர் செலுத்தி பயிற்சி, பதிவு: அக்டோபர் 15, 2019 14:13 PM.
[8] https://www.dailythanthi.com/News/India/2019/10/15141354/New-terrorist-terror-plot-in-Tamil-Nadu-Rocket-Launcher.vpf
[9] மாலைமலர், தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்– ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர், பதிவு: அக்டோபர் 15, 2019 12:19 IST.
[10] https://www.maalaimalar.com/news/district/2019/10/15121902/1266070/New-Militants-plot-in-Tamil-Nadu.vpf
அண்மைய பின்னூட்டங்கள்