Posted tagged ‘உரூஸ்’

நாகூர் தர்கா கந்தூரி விழா:கொடியேற்றம்,சந்தனம் பூசும் நிகழ்ச்சி, ரதங்களில் ஊர்வலம்!

மே 11, 2010
நாகூர் கந்தூரி விழா கொடியேற்றம்
மே 11,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24900

நாகப்பட்டினம் : நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா துவக்கத்திற்கு ஏற்றப்படும் கொடி, சிங்கப்பூரில் இருந்து நாகைக்கு நேற்று மாலை வந்தது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில் 453 ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 25ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

சோழ மன்னர் சரபோஜி கட்டித்தந்த பெரிய மினவரா உட்பட ஐந்து மினவராக்களிலும் வரும் 15ம் தேதி இரவு 9.30 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றப்படும் கொடி ஆண்டு தோறும் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து நாகைக்கு கொண்டு வரப்படும். நாகையில் இருந்து ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக புறப்பட்டு நாகூருக்கு வந்த பின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கும்.

பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றுவதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கொடி நேற்று காலை சென்னை வந்தது. அங்கிருந்து கார் மூலம் நாகை செம்மாரக்கடை தெருவில் உள்ள வாப்பாக்கண்ணு என்பவர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கொடியை யானை மீது ஏற்றி முஸ்லிம் ஜமாத்தார்கள் ஊர்வலமாக, யாஹஈசைன் பள்ளித்தெரு அமீது சுல்தான் வீட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு தொடர்ந்து ‘பாத்தியா’ ஓதப்பட்டு வரும் 15ம் தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக நாகூர் தர்காவிற்கு சென்று கொடி ஏற்றப்படும்.

நாகூர் தர்கா கந்தூரி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
மே 16,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25112

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா, கொடியேற்றத்துடன் நேற்று (15-05-2010) துவங்கியது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா 453ம் ஆண்டு கந்தூரி விழா, நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் நாகை மீரா பள்ளிவாசலில், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் வைக்கப்பட்டு ‘துவா’ ஓதப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம் மற்றும் செட்டிப் பல்லக்கு, கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்ட இரண்டு வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு நாகூர் தர்கா வந்தடைந்தது.

தர்கா ஆலோசனை கமிட்டி தலைவர் செய்யது காமில் தலைமையிலான நிர்வாகிகள், கொடிகளுக்கு வரவேற்பு கொடுத்தனர். தர்காவில் மவுலியாக்கள் சிறப்பு ‘துவா’ ஓதிய பின், ஐந்து மினவராக்களிலும் கொடி  ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் வரும் 25ம் தேதி நடக்கிறது. கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்திரிகர்கள் பங்கேற்றனர்.