வெடிபொருட்களை பதுக்கிய வழக்கில் ஏர்வாடி காசிமிற்கு ஐந்தாண்டு சிறை!
ஆகஸ்ட் 10,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=59107
பூந்தமல்லி :சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து, டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி, கண்ணிவெடி, பைப் வெடிகுண்டு ஆகியவற்றை பதுக்கி வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஏர்வாடி காசிமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. சென்னை, புளியந்தோப்பு மசூதி தெருவைச் சேர்ந்தவர் மஸ்தான் (50). கடந்த 1998ம் ஆண்டு இவர் வீட்டின் மாடியில் ஏர்வாடி காசிம், அஸ்ரப் அலி ஆகிய இருவரும் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்று, 10 நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மஸ்தான், இது குறித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது –
384 டெட்டனேட்டர்கள்,
159 ஜெலட்டின் குச்சிகள்,
கண்ணாடி ஜாடியில் 3 கண்ணிவெடிகுண்டுகள்,
ஒரு பைப் வெடிகுண்டு ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
வெடி பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், கடந்த 1998ம் ஆண்டு மே 22ம் தேதி புளியந்தோப்பு போலீசார், ஏர்வாடி காசிமை கைது செய்தனர். அதே ஆண்டு ஜூன் 8ம் தேதி இந்த வழக்கு, பூந்தமல்லி, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், அனைத்து கட்ட சாட்சியங்களும் விசாரித்து முடிக்கப்பட்ட பின், நீதிபதி வணங்காமுடி தீர்ப்பளித்தார். வெடிபொருட்கள் பதுக்கிய குற்றத்திற்காக ஏர்வாடி காசிமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரான அஸ்ரப் அலி தொடர்ந்து தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெடிபொருள் வழக்கில் ஏர்வாடி காசிம்க்கு ஜாமீன்!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33764
வெடிபொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்வாடி காசிம்க்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது: சென்னை: வெடிபொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்வாடி காசிம்க்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அவர் மீதான வழக்கை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டத்தின் கீழ், கடந்த 98ம் ஆண்டு மே மாதம் ஏர்வாடி காசிம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வேறொரு வழக்கில் எட்டு ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. எட்டு ஆண்டு சிறை தண்டனையையும் அனுபவித்து விட்டார். வெடிமருந்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
நிபந்தனையில் ஜாமீன்: இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் காசிம் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: ஒரு குற்றத்துக்கான தண்டனைக் காலத்தை விட, அதிக நாட்கள் சிறையில் இருந்தால் அந்த நபரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர் மீதான வழக்கு விசாரணையை ஏன் விரைந்து முடிக்கவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. பூந்தமல்லியில் தங்கியிருக்க வேண்டும். காலையில் கோர்ட்டிலும், மாலையில் போலீஸ் நிலையத்திலும் ஆஜராக வேண்டும். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆத்திரமூட்டும் வகையில் பேசக் கூடாது. தங்கியிருக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கை, இரண்டு மாதங்களில் பூந்தமல்லி சிறப்பு கோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
அண்மைய பின்னூட்டங்கள்