அல் – காய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்தே இந்த உளவுத் தகவல் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்தே நாட்டின் மேற்கு பகுதிகளில் உள்ள எல்லைப் பகுதிகளில் உஷாராக இருக்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவகள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் களத்தில் உள்ள மத்திய உளவுத் துறையினரிடமிருந்து கிடைத்த இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி எழுந்தபோதிலும், இந்தியாவில் தாக்குதல் நடத்த அல் – காய்தாவும், லஷ்கர் இயக்கமும் தீவிரமாக உள்ள தற்போதைய நிலையில் எந்த விதமான மெத்தனத்திற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது. இதனையடுத்தே அல் – காய்தாவினர் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதரபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது
ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முகமது ஜியாஉல்ஹக் என்பவன் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்த காவல்துறை ஆணையர் வி.கே.கான், கைது செய்யப்பட்ட தீவிரவாதி முகமது ஜியாஉல்ஹக், ஹைதராபாத், செகந்திராபாத் உள்பட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டு இருந்ததாக கூறினார். அவனிடம் இருந்து சீன தயாரிப்பு கையெறி குண்டுகளும், கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தீவிரவாதி முகமது ஜியாஉல்ஹக்கின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் என்று கூறிய காவல்துறை ஆணையர் ஏ.கே.கான், வேலைக்கான சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றிருந்தபோது லஸ்கர் இ தொய்பா தளபதி அப்துல் அஜித்துடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள லஸ்கர் இ தொய்பா தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்ற முகமது ஜியாஉல்ஹக், அங்கிருந்து ஹைதராபாத்திற்கு வந்து குண்டுவெடிப்புகளை நடத்துவதற்காக காத்திருந்த நேரத்தில் காவல்துறையினர் கைது செய்து விட்டதாகவும் அவர் கூறினார்.முகமது ஜியாஉல்ஹக்வுடன் தீவிரவாதிகள் மேலும் சிலர் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் ஹைதராபாத் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார்.
அண்மைய பின்னூட்டங்கள்