கோவை குண்டுவெடிப்பு : ஐகோர்ட் தீர்ப்பு விவரம்

கடந்த 98ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி, பாஷாவின் வீட்டில் சதி திட்டம் நடந்துள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. இந்த சதியில் பாஷா, அன்சாரி, தாஜுதீன் தொடர்ந்து பங்கு கொண்டுள்ளனர். சதி, ரகசியம் இரண்டையும் பிரிக்க முடியாது. இந்த சதியின் விளைவாக, பிப்ரவரி 14ம் தேதி சம்பவம் நடந்துள்ளது. அரசியல் கட்சியின் தலைவரான அத்வானிக்கு அதிக பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். மேடையின் அருகில் செல்ல யாரையும் போலீசார் அனுமதித்திருக்கக் கூடாது. அந்தப் பகுதியையே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், மேடை அருகில் ஒரு டீ கடை இருந்ததாக ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். அந்த வகையில் தான் பாதுகாப்பு இருந்துள்ளது.
விசாரணை நடக்கும் போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயல் குறித்து, சிறப்பு கோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். சிறுபான்மை குழுவின் மனது எளிதில் காயப்பட்டு விடும். சட்ட நடைமுறைக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் பலன் கிடைக்கும் என அவர்களுக்கு புரிய வைப்பதில் விசாரணை கோர்ட் நீதிபதி பெரும் முயற்சி எடுத்துள்ளார். விசாரணையின் போது, அவர்கள் தொழுகை செய்யவும், நோன்பு திறக்கவும் வழி வகை செய்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதன் தேவையை அவர்கள் மெல்ல உணர்ந்துள்ளனர். பிப்ரவரி 14ம் தேதி இரவு, முஸ்லிம் இளைஞர்கள் பலரை போலீசார் கைது செய்ததாக ஒருவர் சாட்சி அளித்துள்ளார். இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தது குறித்து நாங்களும் வீடியோவில் பார்த்தோம். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் அவ்வாறு செய்யப் பட்டது என தெரிவிக்கப் பட்டது. அப்பாவிகளை இது பாதித்திருக்கும். ஆனாலும், நடந்த செயலை எதுவும் நியாயப்படுத்த முடியாது. வன்முறையை எண்ணி துன்புறுகிறோம்.
அப்பாவிகள் பலியாவதன் மூலம், சதிகாரர்கள் என்ன சாதிக்கப் போகின்றனர்? கிரிக்கெட் பந்தை தேடிச் சென்ற இளைஞர்கள் அப்துல் ரகுமான், முகமது சுன்னத், முகமது சுபைர், சம்சுதீனை கொன்றதன் மூலம் என்ன வெற்றி கிடைத்தது? இது யாருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்காது. சம்பவத்துக்குப் பின், சதிகாரர்கள் கூட மகிழ்ச்சி அடைந்திருப்பர் என நாங்கள் நினைக்கவில்லை. அநீதி, வறுமை, படிப்பறிவின்மைக்கு எதிராக யுத்தம் நடத்தினால், அதனால் அதிகம் சாதிக்கலாம். 18 இளைஞர்கள் இறந்தது, இந்தச் சம்பவத்துக்கு ஒரு காரணம். இதனால் குறிப்பிட்ட சமூகத்தினர் காயப் பட்டு, கோபமடைந்துள்ளனர். அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உறவினர்களை இழந்துள்ளனர். சொத்துக்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு இது பெரிய அடியாகும். தாங்கள் அடைந்த துன்பம் போல், சம்பவத் துக்கு காரணமானவர்களும் துன்பப்பட வேண்டும் என அவர்கள் கருதுவது இயற்கையானது தான். குற்றம் நடப்பதை ஒரு குடிமகன் பார்த்தால், அதுகுறித்து போலீசில் தெரிவிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால், பொதுவாக மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சாட்சிகளுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதும் ஒரு காரணம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, சாட்சியம் அளிக்க பலர் முன்வந்தது ஆச்சரியமானது.
மும்பையில் தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி, கட்டுரை எழுதியிருந்தார். அதில், உள்ளூர்வாசிகளின் துணையில்லாமல் எந்த குற்றமும் நடக்காது என குறிப்பிட்டிருந்தார். எனவே, உள்ளூர் மக்களுக்கு தெரியும். இந்த விஷயத்தில் போலீசார் தங்கள் நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையிலான ஆபத்து, நிர்பந்தம், குறைவான நேரம் இருந்தும் புலன் விசாரணை மற்றும் வழக்கு விசாரணையின் போது, போலீசார் தங்கள் கடமையை செய்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர் சாட்சியம் அளிக்கும் போது, தங்கள் மதம், ஜாதி ஆகியவற்றை “இந்தியன்’ என குறிப்பிட்டுள்ளனர். போலீசார் சில குறைகளை செய்யும் போது அதை கண்டிக்கிறோம். அதே நேரத்தில், போலீஸ் அதிகாரிகளின் உணர்வையும் பாராட்ட வேண்டியது நமது கடமை. இந்த உணர்வு நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மத்தியிலும் பரவும் என நாம் நம்புவோம். அப் போது இதுபோன்ற ரத்தக் கறை படிந்த சம்பவங்கள் ஒருபோதும் நடக் காது. 18 பேர் மீதான குற்றச்சாட்டுக் களை அரசு தரப்பு நிரூபித் துள்ளது. 22 பேர் மீது அரசு தரப்பு கூறிய குற்றச்சாட்டு களை நிராகரிக்கிறோம். இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 25, 2013 இல் 2:15 முப
[…] [15] https://islamindia.wordpress.com/2009/12/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E… […]